பிரெஞ்சுமொழி அரிச்சுவடி (French Alphabet in Tamil)

பிரெஞ்சுமொழி | FrenchMoli - Learn French Alphabet in Tamil

ஆங்கில அரிச்சுவடியில் போன்றே பிரெஞ்சு அரிச்சுவடியிலும் அதே 26 உரோமன் எழுத்துக்களே உள்ளன. ஆனாலும் ஆங்கில எழுத்துக்களின் ஒலிப்பு முறைமைக்கும் பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பு முறைமைக்கும் இடையே நிறைய வேறுபாடு உள்ளது. 

எனவே பிரெஞ்சு மொழியை முழுமையாகக் கற்பதற்கு, நாம் முதலில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களின் ஒலிப்பு முறையைச் சரியாக ஒலிக்க (உச்சரிக்க) கற்றுக்கொள்ள வேண்டும்.

  • கவனிக்கவும்: எழுத்துக்களின் வரிவடிவம் ஒரே மாதிரி இருப்பதால், ஆங்கில அரிச்சுவடியில் உள்ள எழுத்துகளை ஒலிப்பது/ உச்சரிப்பது போன்று பிரெஞ்சு எழுத்துக்களை உச்சரிக்கக் கூடாது.

பிரெஞ்சுமொழியில், பிரெஞ்சு அரிச்சுவடியை “லல்fபbபே fப்ரொன்சே” (L’alphabet Français) என்பர். இச்சொற்றொடரைப் பார்த்தீர்களானால், இதில் உள்ள `t` மற்றும் கடைசியில் உள்ள `s` எழுத்துக்கள் ஒலிக்கப்படுவதில்லை. அவற்றைப் பிரெஞ்சில் மௌன எழுத்துக்கள் (Lettres de silence) என்பர். அதனை எதிர்வரும் "பிரெஞ்சு ஒலிப்பு முறைமை" பாடங்களில் விரிவாகப் பார்க்கலாம். 

இன்று இப்பாடத்தை மட்டும் பார்ப்போம்.

பிரெஞ்சு நெடுங்கணக்கு அல்லது பிரெஞ்சு அரிச்சுவடி

முதலில் பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள ஒவ்வொரு எழுத்தையும் எவ்வாறு ஒலிக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம். எடுத்துக்காட்டாக, “a” என்னும் உரோமன் எழுத்தை ஆங்கிலத்தில்  “எ” என்று ஒலிப்போம்; ஆனால் அதே எழுத்தைப் பிரெஞ்சில் “ஆ°” என்று ஒலிக்கவேண்டும். அவ்வாறே பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள அனைத்து எழுத்துக்களையும் பிரெஞ்சு ஒலிப்பு முறைமைக்கு ஏற்றபடி ஒலிக்க வேண்டும். 

கீழே பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்புகளை எளிதாக கற்பதற்குத் தமிழ் எழுத்துக்களில் அவற்றின் ஒலிகள் எழுதிக்காட்டப் பட்டுள்ளன. ஆயினும், அவற்றில் சில எழுத்துக்களின் ஒலிகளை அப்படியே நூற்றுக்கு நூறு வீதம் தமிழில் எழுதிக் காட்ட முடியாது என்பதைக் கவனத்தில் கொள்க. அதனால் சில ஆங்கில எழுத்துக்களையும் தமிழில் புழங்கும் கிரந்த எழுத்துக்களையும் இடையிடையே புகுத்தி எழுதிக்காட்டப்பட்டுள்ளன என்பதைப் பொறுத்துக்கொள்க.

  • A = ஆ 

  • B = bபெ

  • C = செ

  • D = dதெ

  • E = ஹுஃ

  • F = எfப்

  • G = ஜே

  • H = ஆஷ்

  • I  = ஈ

  • J = ஜி

  • K = க

  • L = எல்

  • M = எம்

  • N = என்

  • O = ஒ

  • P = பே

  • Q = கிவ்

  • R = ஏர்°°

  • S = எஸ்

  • T = த்தே

  • U = ஊஃ

  • V = வே

  • W = துபுளு-வே

  • X = இக்ஸ்

  • Y = ஈ-கிரெக்

  • Z = செdத்

கவனிக்கவும்: பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிகளைத் தமிழ் எழுத்துக்களில் எழுதிக்காட்டியுள்ள போதிலும், அவை நூற்றுக்கு நூறு வீதம் துல்லியமானவையல்ல என்பதை மீண்டும் நினைவில் கொள்ளுங்கள். குறிப்பாக e, o, u, r போன்ற எழுக்களின் பிரெஞ்சு ஒலிகளைத் தமிழ் எழுத்துக்களில் எழுதி காட்டமுடியாது. இருப்பினும் கீழே வழங்கப்பட்டுள்ள மேலதிக விளக்கங்கள் உங்கள் புரிதலுக்கு உதவும். 

ஒத்த ஒலிப்பு எழுத்துக்கள்

ஆங்கில எழுத்துக்களின் ஒலிப்பிற்கும் பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பிற்கும் வேறுபாடு இருந்தாலும், இருமொழியிலும் ஒரே மாதிரி ஒலிக்கப்படும் எழுத்துக்கள் 6 உள்ளன. அவற்றை ஒத்த ஒலிப்பு எழுத்துக்கள் எனலாம். அவையாவன:

  • F = எfப்

  • L = எல்

  • M = எம்

  • N = என்

  • O = ஒ

  • S = எஸ்

ஒலிப்பு இடம் மாறும் எழுத்துக்கள்

ஆங்கிலத்தில் ஒலிக்கப்படும் ‘G’ எழுத்தை ஜே’ என்றும்; ‘J’ எழுத்தை  ‘ஜி’ என்றும் இடம் மாறி பிரெஞ்சு மொழியில் உச்சரிக்கப்படுகிறது.

  • G = ஜே (J)

  • J = ஜி (G)

இகர எகர மாற்றம் 

ஆங்கிலத்தில் B = bபி, C = சி, D = dடி, G=ஜி, P = ப்பி, T=ட்டி, V=வி போன்ற எழுத்துக்களை உச்சரிக்கும் போது எழும் இகர ஒலிப்பு, பிரெஞ்சு மொழியில் எகர ஒலிப்பாக இருக்கும். அவற்றைக் கீழே பார்க்கவும்.

  • B = bபெ

  • C = செ

  • D = dதெ

  • G = ஜெ

  • P = பெ

  • T = தெ ("டி" டிகரம், "தெ" தெகரமாக ஒலிக்கப்படும்)

  • V = வெ

  • W = துபுளு-வெ

குறிப்பு: "இரட்டை" எனப் பொருள் தரும் "double" (துbபுளு) எனும் பிரெஞ்சுச் சொல், ஆங்கிலத்தில் "டbபுள்" என்பதற்கு இணையான சொல்லாகும். மேலும் ஆங்கிலத்தில் உள்ள "T" எழுத்தைப் பிரெஞ்சில் "தெ" என்றே ஒலிப்பர். அத்துடன் ஆங்கிலத்தில் உள்ள "T" டகர வரிசை ஒலிகள் எதுவும் பிரெஞ்சில் இல்லை. மாறாக, அவை தகர வரிசை எழுத்துகளாகவே பயன்படும்

முற்றிலும் வேறான ஒலிப்பைக் கொண்ட எழுத்துக்கள்

கீழுள்ள எழுத்துக்களின் ஒலிப்புகள், ஆங்கிலத்திலும் பிரெஞ்சிலும் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கின்றன. எனவே இவ்வெழுத்துக்களில் கூடுதல் கவனம் செலுத்திச் சரியாக ஒலிக்க வேண்டும்.  

  • E = ஃஹு (ə)

  • H = ஆஷ்

  • I  = ஈ ('e' எழுத்தின் ஒலி) 

  • K = க

  • Q = கிவ் ('கியூவ்' அல்ல)

  • R = ஏர்

  • T = த்தே

  • U = ஊh (ü)

  • V = வெ

  • W = துபுளு-வெ

  • X = இக்ஸ்

  • Y = ஈ-கிரெக்

  • Z = செdத்

கவனிக்கவும் 1: பிரெஞ்சில் "T" எழுத்து இருக்கிறது. ஆனால், அது ஆங்கிலத்தில் போன்று "ட், ட, டி, டு, டெ, டொ போன்று டகர ஒலிப்புகள் கொண்டவை அல்ல. மாறாக "T" எழுத்தின் ஒலிப்பு, பிரெஞ்சில் "த், த, தி, தெ, தொ' போன்று தகர ஒலிப்புகளாகவே ஒலிக்கப்படும்.

கவனிக்கவும் 2: பிரெஞ்சில் "H" எழுத்து உள்ளது. ஆனால் அது ஆங்கிலத்தில் உள்ள "ஹ" எழுத்தின் ஒலி பிரெஞ்சில் இல்லை. மாறாக அதொரு ஒலிப்பற்ற மௌன எழுத்தாக மட்டுமே பயன்படுகிறது. (எனவே பிரெஞ்சில் "H" எழுத்து, ஒரு ஒலிப்பற்ற வெற்றெழுத்து மட்டுமேயாகும்.)

டப்ள்-யு-வும் துப்ள்-வே-யும்

ஆங்கிலத்தில் "U" எழுத்தை "யு" என்றொலிப்பர்; அதேநேரம் "W" எழுத்தை, "டப்ள் யு" என்பர். அதாவது "இரட்டை யு" என்னும் விதமாக.

ஆனால், பிரெஞ்சில் "V" எழுத்தை "வெ" என்றொலிப்பர்; அதேநேரம், "இரட்டை வெ" எனும் வகையில் ("V + V = W")  "துப்ள் வே" என்றொலிப்பர். 

குறிப்பு: "Double" எனும் சொல் பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் ஒரே மாதிரியே எழுதப்படுகிறது ஆனால், ஒலிக்கும் போது பிரெஞ்சில் "துbப்ள்" என்றும், ஆங்கிலத்தில் "டbப்ள்" என்றும் இருவேறு விதமாக ஒலிக்கப்படுவதைக் கவனத்தில் கொள்ளவும். அத்துடன் "W" எழுத்தையும் இருவேறு விதமாக ஒலிக்கப்படுகிறது என்பதையும்  நினைவில் கொள்ளுங்கள். 

பிரெஞ்சு அரிச்சுவடியில் உள்ள எழுத்துக்களை எவ்வாறு ஒலிக்க/உச்சரிக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாக இப்பாடம் விளக்கியிருக்கும். இவற்றைச் சரியாக விளங்கிக்கொண்டீர்களானால் பிரெஞ்சு அரிச்சுவடி மட்டுமன்றி பிரெஞ்சுச் சொற்களின் எழுத்துக்களைக் கூட்டி வாசிப்பதும் எளிதாக இருக்கும். எனவே, இவற்றை மீண்டும் மீண்டும் வாசித்து மனப்பாடம் செய்துக் கொள்ளுங்கள். கூடிய விரைவில் எளிதாகப் பிரெஞ்சுக் கதைக்கும் ஆற்றலைப் பெற்றுக்கொள்ளலாம்.. 

சரி உறவுகளே, மீண்டும் அடுத்தப் படத்தில் சந்திப்போம்! 

இந்தப் பாடம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால்; உங்கள் நண்பர்கள், உறவினர்கள், பிரெஞ்சுக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் என அனைவரிடமும் பகிருங்கள்; உங்கள் சமூக வலைப்பக்கங்களில் பகிர்ந்து இந்தத் தளத்திற்கு ஆதரவும் தரலாம்.

நன்றி!


அன்புடன் 

ச. தங்கவடிவேல், பிரான்சு

_ _ _

பி.கு.: கீழுள்ள ஐகொன்களைச் சொடுக்கி, எமது சமூக வலைப்பக்கங்களான: முகநூல் | இன்சுடாகிராம் | டுவிட்டர் | பின்டரசுட் | லின்கிடின் போன்றவற்றின் ஊடாகவும் எம்முடம் இணைந்துக்கொள்ளலாம்.

        

Comments

  1. நீங்கள் கொடுத்த LinkedIn இணைப்பு வேலை செய்யவில்லை

    ReplyDelete
    Replies
    1. இன்னும் LinkedIn பக்கம் தொடங்கவில்லை, நண்பரே! தொடங்கியதும் இணைப்பை வழங்குகிறேன். நன்றி!

      Delete

Post a Comment

Popular posts from this blog

பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)

பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)

பிரெஞ்சு எண்கள் 0 இருந்து 1,000,000,000 வரை (French Numbers in a Different Order : 0 - 1,000,000,000)