About Us

வணக்கம், உறவுகளே! 

இந்தப் பிரெஞ்சுமொழி வலைத்தளத்துக்கு உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி! 

இப்பக்கம் என்னைப் பற்றிய பக்கமாகும். எனவே என்னைப் பற்றி ஒரு சில வரிகள் உங்களுடன் . . .

நான் 2020ஆம் ஆண்டிறுதியில் தான் பிரான்சுக்கு வந்தடைந்தேன். அதுவொரு தற்செயல் நிகழ்வு. பிரான்சுக்கு வருவதற்கு ஒரு மாதத்துக்கு முன்பு வரை, பிரான்சு வரவேண்டும் என்ற எந்த எண்ணமும் எனக்கிருக்கவில்லை.

கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் உலகமே இயங்கற்றிருந்த காலம், வான்பரனை நிலையங்கள் செயலற்று முடங்கிக் கிடந்தன. 2020ஆம் ஆண்டிறுதியில் ஒரு சில வானூர்திகள் மட்டும் பறக்கத்தொடங்கியப் பொழுது எனது பிரான்சு பயண ஏற்பாடு செய்யப்பட்டது. பெருந்தொற்றுப் பயம் ஒருபுறமிருக்க வானூர்தியில் ஏறியாயிற்று. 

தென்சீனாவின் முத்து ஆற்றின் முகத்துவாரத்தில் (Pearl River Delta), முத்தாற்றின் நீர்க் கடலில் கலக்குமிடத்தில் சிறிதும் பெரிதுமாக 257 மலையும் மலைசார்ந்த தீவுக்கூட்டம் உள்ளன. அவற்றுடன் தென்சீன நிலப்பரப்பின் ஒரு பகுதியான "கவுலூன்" மூவலந்தீவுப் பகுதியும் பிராத்தானியரின் அபினிப் போர்களின் போது கைப்பற்றப்பட்டு பிரித்தானிய ஆளுகைக்குள் ஒரு காலனியாகியிருந்தது. அந்தக் காலனிக்குப் பெயர் கொங் கொங். அந்தக் காலனி 1997ஆம் ஆண்டு கைசாத்திடப்பட்ட ஒரு நல்லிணக்க உடன்படிக்கையின்படி, பிரித்தானிய இளவரசர் சால்சு அவர்களால் மீண்டும் சீனாவுக்குத் திருப்பிக் கையளிக்கப்பட்டது. பிரித்தானியாவின் ஆளுகைக்குள் செழிப்பாக வாழ்ந்த கொங் கொங் மக்கள் சீனாவின் ஆளுகைக்குள் வாழ விரும்பவில்லை. அதனால் எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் செய்தனர். ஆயிரக்கணக்கானோர் நாட்டைவிட்டு வெளியேறினர். ஈற்றில், சீன அரசு ஒரு நாடு இரு கட்டமைப்புகள் (one country two systems) எனும் முறையை அறிமுகப்படுத்தியது. அதன்படி பிரித்தானிய சட்டத்திட்டங்கள் தொடர்ந்திருக்க ஒப்புதல் அளித்தது. அதனால் அந்நாடு சீனாவின் சிறப்பு நிருவாகப் பகுதி என்றழைக்கப்பட்டது.  

அந்தச் சிறப்பு நிருவாகப் பகுதியில்தான் எனது வாழ்நாளின் பெரும்பகுதி கழிந்தது. (ஒரு நூலாக எழுதுக்கூடிய அத்தனை அம்சங்களும் அதிலடங்கும்.) அந்தச் சிறப்பு நிருவாகப் பகுதியிலிருந்தப் பொழுது, சரியாக 2007ஆம் ஆண்டு மாவீரர் நாளன்று தொடங்கியதுதான் ஆங்கிலம் வலைத்தளம். அதன் முதலிடுகை நவம்பர் 27ஆம் நாள் பதிவிடப்பட்டது. அது இன்றளவும் மாதம் பல்லாயிரம் பேர் ஆங்கிலம் கற்கும் தளமாக உள்ளதென்பது மனதுக்கு மனநிறைவு தருவதாகும். 

இங்கே இவற்றை ஏன் கூறுகிறேன் என்றால், நான் எனது தாயகத்தைவிட்டு கொழும்புக்குச் சென்றைடந்தப் போது, என்னால் முதன்முதலாக மொழிச் சிக்கலை எதிர்க்கொள்ளவேண்டியேற்பட்டது. ஆனால், சிங்களம் எனும் மொழி, இலங்கைத் தீவில் புத்தமதம் தோன்றுவதற்கு முன்பிருந்த தமிழ் மொழியுடன் பாளி மொழிக் கலப்பினால் உருவான மொழியென்பதால், அம்மொழியை என்னால் எளிதாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. அத்துடன் சிங்கள மொழியாய்வு குழுமம் ஒன்றுடன் இணைந்து பங்காற்றியதால் அம்மொழியை விரைவாகக் கற்கக்கூடியாத இருந்தது. 

ஆங்கிலம் எமது பாடசாலைப் பாடக் கல்வியில் ஐந்தாம் ஆண்டிலிருந்தே ஒரு பாடமாக இருந்ததென்பதாலும், பிரித்தானியர் காலந்தொட்டு ஆங்கிலச் சொற்கள் எமது தாய்மொழியில் கலந்து கதைக்கப்படுவதாலும், அம்மொழி எனக்கோர் விருப்புப் பாடமென்பதாலும், கல்வி கற்கும் காலந்தொட்டே ஆங்கிலம் கற்பித்தல் எனது பகுதிநேர தொழில் தகமையானதாலும், எனக்கெந்த மொழிச் சிக்கலும் தென்னாசிய நாடுகளுக்கு நான் சென்றபோது ஏற்படவில்லை. அத்துடன் சீனாவின் சிறப்பு நிருவாகப் பகுதியில் ஆங்கிலமும் ஒரு அலுவல் மொழியென்பதால் மொழி சிக்கல் ஏற்படுவதற்கான காரணமும் இருக்கவில்லை. மாறாக ஆயிரக்கணக்கான ஆங்கிலேயர் செறிந்து வாழும் நாடாக அது இருந்ததனால் எனது ஆங்கில மொழியாற்றலை மென்மேலும் வளர்த்துக்கொள்ளக் கூடியதாகவும் மொழித்துறைசார்ந்து பணியாற்றக் கூடியதாகவும் இருந்தது.

ஆனால், பிரான்சில் காலடி வைத்தபோது, நான் முதன்முறையாக மொழிச் சிக்களுக்கு உள்ளானேன். இந்த நாட்டின் மொழியான பிரெஞ்சில் "ஆம்", "இல்லை" எனுஞ்சொற்கள் கூட எனக்குத் தெரியவில்லை. பிரான்சின் சார்லு-து கோல் (charles de gaulle) பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இறங்கியதும் "Bபொ-சூ" (bonjour) என்பதற்குக் கூட என்னால் மறுமொழிய முடியவில்லை.  

பிரெஞ்சு மொழியினர் மிகுந்த மொழிப் பற்றுக்கொண்டோராவர். ஆங்கிலம் அறிந்திருந்தாலும், ஆங்கிலத்தில் கதைக்கமாட்டினர். அதிலும் பெரிய வேடிக்கை என்னவென்றால், "Can you speak English, please?" எனக் கேட்டால், "I'm sorry, I can't speak English." என ஆங்கிலத்திலேயே மறுமொழிகின்றனர். சில நேரங்களில் கடுப்பானாலும், பிரெஞ்சு நாட்டில் பிரெஞ்சு மொழியில் கதைக்காமல் வேறெந்த மொழியில் கதைப்பது எனும் ஞாயமானக் கேள்வியும் என்னுள் எழாமலில்லை. அதனால் எப்படியாவது பிரெஞ்சு மொழியைக் கற்கவேண்டும் என்பதைத் தவிர வேறெந்தத் தெரிவும் எனக்கில்லை. 

இதுபோன்ற சிக்கல்கள் இனிப் புதிதாகப் பிரான்சுக்கு வருவோருக்கு ஏற்படக் கூடாதெனும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்தப் "பிரெஞ்சுமொழி" வலைத்தளமாகும். 

பிரான்சில் பிரெஞ்சு மொழிக் கற்பிப்போர் பலர் இருந்தாலும், பிரான்சு அரசே இலவயமாகப் பிரெஞ்சுக் கற்பிக்கிறதென்றாலும், புதிதாகப் பிரான்சுக்கு வருவோருக்கு இந்தத் தளம் ஏதேனுமொரு வகையில் உதவியாக இருந்தால் அதுவே எனக்குப் பெரும் மனநிறைவானதாகும். 

ஆங்கில மொழியைப் போன்றே, பிரெஞ்சும் அதே 26 உரோமன் எழுத்துகளைக் கொண்ட மொழியென்பதாலும், ஆங்கிலத்தில் பயன்படும் பல்லாயிரக்கணக்கான சொற்கள் பிரெஞ்சிலிருந்தே ஆங்கிலம் கடன் பெற்றுக்கொண்டதென்பதாலும், பிரெஞ்சு மொழியின் இலக்கணத்தைக் கற்பதும், வாசிப்பதும், எழுதுவதும் கூட பெருஞ் சிக்கல்களாகயில்லை. ஆனால் பிரெஞ்சு மொழியைக் கதைப்பதுதான் சிக்கலாகவுள்ளது. 

அதனால், எனது பிரெஞ்சு மொழி பயிற்சி இன்றும் தொடர்ந்தவண்ணம் தான் உள்ளது. எனவே, பிரெஞ்சு மொழியைக் கற்க முயல்வோர் என்னுடன் இணைந்துக் கொள்க! 

இப்போது என்னைப் பற்றியும் எனது மொழியியல் பார்வைப் பற்றியும் ஓரளவு  விளங்கிக்கொண்டிருப்பீர்கள் என நினைக்கின்றேன். 

உங்கள் கருத்துகளைப் பின்னூட்டப் பெட்டியில் இட்டுச்செல்லுங்கள். 

நன்றி! 

அன்புடன்

ச. தங்கவடிவேல், பிரான்சு

Comments

Popular posts from this blog

பிரெஞ்சு எண்கள் 1 - 100 (French Numbers 1 - 100 in Tamil)

பிரெஞ்சு எண்கள் 0 இருந்து 1,000,000,000 வரை (French Numbers in a Different Order : 0 - 1,000,000,000)

பிரெஞ்சு கிழமை நாட்கள் (French Days of the Week in Tamil)