FrenchMoli Introduction - பிரெஞ்சுமொழி வலைத்தள அறிமுகம்
குறிப்பு: பிரெஞ்சு மொழி பேசும் ஒரு நாட்டில் பிறக்கும் தமிழ்க் குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும் முன்பே, பிரெஞ்சு மொழியைச் சரளமாகப் பேசும் ஆற்றலைப் பெற்றுவிடுவதால், பொதுவாக அவர்களுக்கு இவை முதன்மையான பாடங்களாக இருக்க வேண்டியதில்லை. ஆனால் பிரான்சு நாட்டிற்குப் புதிதாக வருகைத் தரும் ஒவ்வொருவருக்கும் அல்லது பிரான்சு வந்து புதிதாகப் பிரெஞ்சு மொழி கற்கும் ஒவ்வொருவருக்கும் இவை இன்றியமையாத பாடங்களாக இருக்கும் என்பதில் எனக்கெந்த ஐயமும் இல்லை.
இந்த அடிப்படைப் பாடங்களைக் கற்றப்பின், பிரெஞ்சு இலக்கணப் பாடங்களுக்குச் செல்வது எளிதாக இருக்குமென்பது எனது கருத்து.
எனவே, "பிரெஞ்சு முகமன் சொற்கள்", "பிரெஞ்சு மொழியின் அறிமுக உரையாடல் சொற்கள்", "அடிக்கடி பயன்படும் சொற்றொடர்கள்" என எமது அடிப்படைப் பாடங்கள் இத்தளத்தில் வழங்கப்பட்டுள்ளன. அதன் அடுத்தக்கட்ட பாடங்களாகப் "பிரெஞ்சு அரிச்சுவடி", "பிரெஞ்சு எண்கள்", "பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பு முறைமை" போன்ற பாடங்கள் எடுத்துக்காட்டுகளுடன் இடப்பட்டுள்ளன.
சில விளக்கங்கள்
- தமிழில் தமிழ் எழுத்துக்களைக் கூட்டி "அம்மா" என்று எழுதினால், அதனை எப்படி வாசித்தாலும் "அம்மா" என்றுதான் ஒலிக்கும். ஆனால் ஐரோப்பிய மொழிகளின் ஒலிப்பு முறைமை அவ்வாறனதல்ல. குறிப்பாகப் பிரெஞ்சும் ஆங்கிலமும் ஒரேமாதிரியான, 26 உரோமன் எழுத்துகளைக் கொண்டுள்ள போதிலும், இவ்விரண்டு மொழியிலும் எழுத்துக்களைக் கூட்டி வாசிக்கும் அல்லது ஒலிக்கும் முறைமை முற்றிலும் வேறுபட்டதாகும். எழுத்துக்களின் ஒலிப்பு மட்டுமன்றி, சொற்களின் ஒலிப்பு முறைமையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டது. பிரெஞ்சிலும் ஆங்கிலத்திலும் பல சொற்கள் எழுத்து வடிவிலும் அவை குறிக்கும் பொருள்களும் ஒன்றாக இருக்கும்; ஆனால் அவற்றின் ஒலிப்பு முறைமை முற்றிலும் வேறுபட்டவையாக இருக்கும். அவற்றை விரிவாக எதிர்வரும் பாடங்களில் பார்க்கலாம். இப்போதைக்கு எடுத்துக்காட்டாகக் கீழுள்ள சொற்களைப் பாருங்கள்.
- table = ஆங்கிலத்தில்: டேபள், பிரெஞ்சில்: தாபிள் (மேசை)
- entry = ஆங்கிலத்தில்: என்ட்ரி, பிரெஞ்சில்: entrée/ ஓன்த்ரே (நுழைவு)
இப்படி இன்னும் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. எனவே பிரெஞ்சு மொழியைக் கற்கும் நாம், இம்மொழியின் ஒலிப்பு (உச்சரிப்பு) முறைமைக்கு முக்கியத்துவம் கொடுத்து அவற்றைச் சரியாகக் கற்றுக்கொள்ள வேண்டும். (ஆங்கில ஒலிப்பு முறைமையில், பிரெஞ்சு எழுத்துக்களையோ பிரெஞ்சுச் சொற்களையோ ஒலித்தால், நிச்சயமாக பிழையாகிவிடும்.) அதனால், பிரெஞ்சு மொழிக் கற்போர் பிரெஞ்சுச் சொற்களினதும் வாக்கியங்களினதும் வேறுபாடுகளை எளிதாக விளங்கிக்கொள்வதற்கு, குறிப்பிட்ட இடங்கள் வெவ்வேறு நிறங்களினால் வேறுபடுத்திக் காட்டப்பட்டிருக்கும். அவை பிரெஞ்சுக் கற்போருக்கு எளிதாக விளங்கிக்கொள்ள உதவும்.
எமது இந்தப் பிரெஞ்சுப் பாடத்திட்டம் கீழுள்ள முதன்மைப் பகுப்புகளைக் கொண்டுள்ளன.
முதன்மைப் பிரெஞ்சு மொழிப் பாடங்கள்
- பிரெஞ்சு முகமன் சொற்கள்
- பிரெஞ்சு அறிமுக உரையாடல்
- அடிக்கடி பயன்படும் பிரெஞ்சுச் சொற்கள்
- இன்னும் பல ...
அடிப்படைப் பிரெஞ்சு மொழிப் பாடங்கள்
- பிரெஞ்சு அரிச்சுவடி
- பிரெஞ்சு எண்கள்
- பிரெஞ்சு மாதங்கள்
- பிரெஞ்சு கிழமை நாட்கள்
- பிரெஞ்சின் சிறப்பு எழுத்துக்கள்
- பிரெஞ்சு எழுத்துக்களின் ஒலிப்பு முறைமை
- இன்னும் பல ...
சிறப்பாய்வுக் கட்டுரைகள்
- தமிழ் பிரெஞ்சு ஒப்பீடு
- தமிழிலும் பிரெஞ்சிலும் காணப்படும் மொழிவழக்கு ஒற்றுமைகள்
- ஆங்கிலம் பிரெஞ்சு ஒப்பீடு
- பிரெஞ்சில் பயன்படும் ஆங்கிலச் சொற்கள்
- ஆங்கிலத்தில் பயன்படும் பிரெஞ்சுட் சொற்கள்
- பிரெஞ்சு மொழி வரலாறு
- உலகில் பிரெஞ்சின் செல்வாக்கு
- இன்னும் பல ...
பிரெஞ்சு இலக்கணப் பாடங்கள்
- பிரெஞ்சு மொழியின் பேச்சின் கூறுகள்
- இன்னும் பல .... [இலக்கணப் பாடங்களே அதிகம் என்பதால், அவை தனித்த ஒரு பட்டியலாக இடப்படும்.]
நோக்கம்: இந்த இணைய வழி பிரெஞ்சு மொழிப் பாடங்கள், தமிழ் தமிழர் நலஞ்சார் நோக்கில் பதிவிடப்படும் ஒரு தன்னார்வ முயற்சி மட்டுமேயாகும். இவை முற்றிலும் இலவச பாடங்களாகும்.
புதிதாகப் பிரெஞ்சு நாட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவருக்கும், இலவசமாகப் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொள்வதற்கான பல்வேறு வசதிகளை இந்தப் பிரான்சு நாடு செய்துள்ளது. இருந்தப்போதும், அவை எதுவும் தமிழ் வழியில் கற்பிக்கப் படுபவையல்ல. வாழ்நாளில் ஒரு பிரெஞ்சுச் சொல்லையேனும் கேட்டிராத ஒருவர், தமிழ்மொழி விளக்கமின்றி பிரெஞ்சுச் கற்பதென்பது எளிதானதல்ல. சிலர் பிரெஞ்சுகாரரிடமே பிரெஞ்சுக் கற்றால், பிரெஞ்சு உச்சரிப்புகளைச் சரிவர கற்றுக்கொள்ளலாம் என்பர்; ஒரு மொழியின் உச்சரிப்பைப் பொருத்தமட்டில் தாய்மொழியினரின் உச்சரிப்பே சரியானது என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. ஆனால், உச்சரிக்கப்படும் சொற்களின் அல்லது பேசும் வார்த்தைகளின் பொருள் என்னவென்றே விளங்காத போது, எவ்வளவு சரியாக உச்சரிப்புப் பயிற்சி பெற்றாலும், அது பொருள் விளங்கா மொழிக் கற்றலாகவே இருக்கும். எனவே ஒரு மொழியைக் கற்பவர் முதலில் அதன் பொருள் விளங்கிக் கற்பதே சாலச் சிறந்தது.
தமிழரான ஒருவர் தமிழ்மொழியூடாகப் பிரெஞ்சுக் கற்கும் போது, ஒலிப்பு மட்டுமன்றி ஒவ்வொரு சொல்லினதும் வாக்கியத்தினதும் பொருளுணர்ந்து கற்க முடியும்.
இன்னொன்றையும் கவனியுங்கள். இன்று இரண்டாம் மூன்றாம் தலைமுறைத் தமிழர்களாக வாழும் பலர் சரளமாகப் பிரெஞ்சு மொழியைக் கதைத்தாலும், அவர்களால் புதிதாகப் பிரான்சுக்கு வருகைத்தரும் ஒருவருக்குத் தமிழ் விளக்கத்துடன் பிரெஞ்சைக் கற்பிக்க முடியாதுள்ளனர்.
தமிழில் பொருள் விளக்கம் கொடுக்க முடியாத அல்லது பொருலை விளங்கப்படுத்த முடியாத ஒருவர், பிரெஞ்சில் எத்தகைய புலமைப் பெற்றிருப்பினும், அவரால் ஒரு சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளராக என்றாலும் ஆக முடியாதுள்ளார். இதனைப் பலவிடங்களில் கண்கூடாகக் காணக்கூடியதாக உள்ளது என்பதையும் எண்ணிப்பாருங்கள்.
இலங்கை, இந்தியா போன்ற எமது நாடுகள் பிரித்தானியரின் காலனித்துவ நாடுகளாக இருந்ததனாலும் தொடர்ந்தும் ஆங்கிலம் எமது பாடசாலைக் கல்வியில் ஒரு பாடமாக இருப்பதனாலும், நாம் எமது அன்றாட வாழ்வில் தமிழுடன் கலந்து ஆயிரக் கணக்கான ஆங்கில சொற்களைக் கதைத்தும் எழுதியும் வருகின்றோம். அதனால் ஒப்பீட்டளவில் எளிதாக ஆங்கிலத்தை விளங்கிக்கொள்ள முடிகிறது. ஆனால் பிரெஞ்சு மொழியில் ஒருசில சொற்கள் கூட எமக்கு அறிமுகமில்லாத நிலையில், எடுத்த எடுப்பிலேயே பிரெஞ்சு வழி பிரெஞ்சுக் கற்பது என்பது பெருஞ் சவலாகவே இருக்கும். அது கண்களைக் கட்டிக் காட்டில் விட்டது போன்றதாக இருக்கும்.
எனவே, ஒருவர் தமிழ் விளக்கத்துடன் பிரெஞ்சு மொழியைக் கற்பாரெனில், பிரெஞ்சு மொழிச் சொற்களின் பொருள்களையும் எளிதாக விளங்கிக்கொள்ளக் கூடியவராக இருப்பார்.
இந்தப் பிரான்சு நாட்டில் ஒருவர் உயர்தொழில் வாய்ப்பு, வதிவிடவுரிமை, குடியுரிமை போன்றவற்றைப் பெறுவதற்குப் பிரெஞ்சுமொழி ஒரு கட்டாய தகமையாக இருப்பதுடன் அவற்றிற்கான பிரெஞ்சு மொழி தகமைகள் A1, A2, B1, B2, C1, C2 என வரையறுக்கப்பட்டுள்ளன. எனவே ஒருவர் பிரெஞ்சு மொழியைக் கற்க அரசு வழங்கும் வாய்ப்புகளைக் சரியாகப் பயன்படுத்திக்கொள்வதற்கும், பிரெஞ்சு மொழி தொடர்பான ஓரளவு புரிதலைப் பெற்றிருத்தல் பயன்மிக்கது; அதற்கு இந்தத் தளத்தில் வழங்கப்படும் பாடங்களும் உதவி குறிப்புகளும் உங்களுக்கு உதவும்.
மேலும் பிரெஞ்சு மொழிப் பாடங்கள் தொடர்பான ஏதேனும் ஐயங்கள் கேள்விகள் எழுந்தால், தயங்காமல் எமது மின்னஞ்சல் frenchmoli.info@gmail.com ஊடாகவோ, கீழேயுள்ள கருத்துரைப் பெட்டியின் ஊடாகவோ எம்மைத் தொடர்புகொள்ளலாம்.
இந்தப் பாடங்களை நீங்கள் எந்த வயதினரானாலும் இணைந்து கற்கலாம். நகல் (Print) எடுத்தும் கொள்ளலாம். அதேவேளை இப்பாடங்கள் பயனுள்ளவை என நீங்கள் கருதினால் உங்கள் நண்பர்கள், உறவினர்கள், பிரெஞ்சுக் கற்க விரும்பும் ஆர்வலர்கள் என அனைவருக்கும் அறிமுகப் படுத்தலாம். சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பலரது பயன்பாட்டிற்குக் கொண்டு செல்லலாம். அது நீங்கள் இந்த வலைத்தளத்திற்குச் செய்யும் ஒரு பங்களிப்பாக இருக்கும்.
நன்றி!
அன்புடன்
ச. தங்கவடிவேல், பிரான்சு
Comments
Post a Comment